Friday, January 7, 2022

அந்த நாள் ஞாபகம்..வந்ததே..


மொறு மொறுவென்று பொன்னிறத்தில் தோசை வார்த்து கொண்டிருக்கும்போது , அன்று அம்மாவிடம் மொறு மொறு தோசைக்கு அடம் பிடித்ததை நினைத்து இன்று மனம் ஏகத்திற்கு வருந்தியது.

மெத்து மெத்தென்று  தண்டவாள தோசை  கல்லில் யாராவது  வார்த்து போடமாட்டார்களா என்ற ஏக்கம் இன்று.

அப்போது காலை டிபன்- breaking the fast - concept எல்லாம் கிடையாது.

பத்து பதினோரு மணிக்கு நேராக  சாப்பாடு.

ஸ்கூல் நாட்களில் சூடாக பருப்பு சாதம் +  ரசம்  காலையில் . மதிய சாப்பாட்டுக்கு மரத்தடியில் வட்டமாக உட்கார்ந்து சாம்பார் அல்லது தயிர் சாதம். 
அந்த ருசி இன்னமும் ஊசி போகாமல் நினைவில் நிற்கிறது.

லீவு நாளிலும் எப்போதும் போல் எழுந்து குளித்து விடவேண்டும். ஒரே ஒரு குளியலறை. கூட்டு குடும்பம் . எப்படித்தான் அத்தனை பேரும் அதில் குளித்து நேரத்திற்கு பள்ளி, கல்லூரி,ஆபிஸ் போனோமோ ..மலைப்பாக இருக்கிறது.

குளித்தால் தான் சாப்ப்பாடு. இப்போது போல் லீவு என்றால் பத்து மணிக்கு எழுந்து ..குளிக்காமல் மூன்று மணிக்கு swiggy ..என்ற அராஜகம் எல்லாம் கிடையாது.

மொட்டை மாடியில் வத்தல்,வடாம் போடுகின்ற தினம் மட்டும் லேட்டாக குளிக்கலாம். காக்காவிடமிருந்து காப்பாற்றுகிறேன் என்று பாதி காய்ந்த பச்சை வடாம் நாங்களே ஸ்வாஹா பண்ணி விடுவோம்.ஒரே இடத்தில் இருந்து பிய்த்தால் மாட்டிக்கொள்வோம் என்று நாலா பக்கத்திலிருந்தும் பிய்த்துஎடுப்போம் ! ஜவ்வரிசி வடாம் 10-15 கூட  மீீீதம் இருக்காது.

கோடை விடுமுறையில் இரண்டு   மணியளவில் ஒரு சுற்று பல்லாங்குழி, ஏழு கல், நொண்டி பாண்டி,எல்லாம் விளையாடி டிரேட் விளையாடும் போது  களைத்துப்போய் பயங்கர பசி எடுக்கும் ..

பட்டு பாட்டி ரெடியாக கச்சட்டியில் சாதம் ,அடி  ரசம் , நல்லெண்ணெய் விட்டு பிசைந்து எல்லாருக்கும் கையில் போடுவார்கள்.
அது அக்மார்க் அமிர்தம். 

பண்டிகை நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கிருஷ்ண ஜெயந்தி என்றால் பெரிய வேட்டி ஒன்றை போட்டு எல்லாருக்கும் சீடை மாவு சமமாக பிரித்து கொடுக்கப்படும். வேட்டியை சுற்றி உட்கார்ந்து அவரவர் பங்கை உருட்டி போட்டால் தான் சீடை கிடைக்கும்.
இப்போது போல வருடம் முழுக்க சீடை கிடைக்காது. அபூர்வ வஸ்து .அதனால் மதிப்பு அதிகம்.

தீபாவளி ..oh my god ! என்ன ஓர் கோலாகலம். இந்த பண்டிகைக்கு மட்டும் நிவேதனம் கிடையாது. செய்ய செய்ய சாப்பிடலாம். தீபாவளி மருுந்து காப்பாற்றும். 

பிறந்த நாள் மற்றும் தீபாவளி என இரண்டு முக்கிய தினத்திற்கு மட்டுமே புது சட்டை. அதுவும் இரண்டும் ஒருசேர வந்து தொலைத்தால் உலக அளவில் வர்த்தக பேரம் நடக்கும் - இரண்டு புது சட்டை அல்லது விலை உயர்ந்த ஒன்று என்று.  
இரண்டு நாளும் ஒரே புது துணி போட்டுக்கொள்ளும் துக்கம் சொல்லி மாளாது.

Hmm..இப்போது தினம் தீபாவளி.
புது சட்டை போடும் சந்தோஷமும் , வருடம் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் சீடை ,முறுக்கு சாப்பிடும் 
ஆவலும் போயே போச்சு.

விடிகாலையில் வீட்டு வாசலில் வந்து மங்கள இசை வாசித்த நாதஸ்வர வித்வான், பழைய பட்டுபுடவை பல போர்த்திய பசு மாடு, 
நல்ல காலம் பொறக்குது என்று நம்பிக்கை கொடுத்த  குடு குடுப்பாண்டி  Mask போட்டுகொண்டு ,மீசை மறைந்தாலும் மீண்டும் வந்தால் நன்றாக  இருக்கும்.

பிள்ளையார் சதுர்த்தி..ஆஹா நினைத்தாலே இனிக்கிறது.
குறைந்தது 100 /150 கொழுக்கட்டை செய்ய ஆள்/ தேள் எல்லாம் கிடையாது. 
வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லாரும் சேர்ந்து பூரணம் வைக்க ,அரிசி  மாவு சொப்பு 
செய்வோம். 
அதில் வேறு , கொழுக்கட்டை மூக்கு சரியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் சப்பை முக்குடன் பிறப்போம் என்று பயமுறுத்தியது இன்றளவும் பய பக்தியுடன் கொழுக்கட்டை செய்ய வைக்கிறது! 

அலை அலையாக வரும் Corona வினால் வந்த நினைவலைகள்.

இப்போதைக்கு , அலை அலையாக அழகழகாக  நீர் பாயும் ஒடை கரையில் .என்ற 
ஷங்கர் கணேஷ் + SPB + SP Shailaja  இசை தான் அந்நாளில் இருந்த சந்தோஷங்களின்  சாட்சி. 


7 comments:

Bhanu said...

Could completely relate to the vadam story.. every point. Nice capture Viji !!!

SUMATHY said...

மறக்க முடியாத நாட்கள்

Ripple-waves said...

I am so happy you could connect with these memories. Thanks for reading and dropping a line !

Ripple-waves said...

Yes true,Sumathi chithi.

karthi said...

Nostalgia is God’s gift and relates to the one who cherishes the past and articulate 👍👍

Bharathi said...

Beautifully worded Viji...Takes me back to those wonderful childhood days

Ripple-waves said...

Thankyou Bharathi.indeed those days were wonderful

Akshaya tritiya - Caveat Emptor!

 Akha Teej or Akshaya tritiya is an auspicious day for the Hindus and Jains. 'Kshaya' in Samaskritam means to erode/diminish. 'A...